top of page
Search

தேவனுக்காகவும்.. தேசத்துக்காகவும்!

Updated: Oct 9, 2022

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது.. ஆரம்ப காலத்தில், அமைப்பு ரீதியாக இந்திய விடுதலைக்காகப் போராடிய அரசியல் கட்சி 1885 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மட்டுமே. பொதுஉடைமை சித்தாந்தம், சோசலிச சித்தாந்தம் என பல்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றிய தலைவர்கள் அனைவரும் காங்கிரஸ் என்ற ஒரே குடையின் கீழ் பணியாற்றிய காலம் அது. ஆரம்ப காலத்தில் அந்த இயக்கம் மெத்தப் படித்த மக்கள், மேட்டுக் குடியினர் என்ற உயர் மட்ட மக்களிடையே, தேநீர் கோப்பைக்குள் சுழன்றடிக்கும் புயலாக (STORM OVER A TEA CUP ) மட்டுமே இருந்தது. கால வெள்ளத்தில் இந்த விடுதலைப் போராட்டம் வெகு ஜன இயக்கமாக மாறியது. இந்த மாற்றத்திற்கு காந்தியடிகளும் ஒரு காரணம். அது மட்டுமல்ல: தீவிர வாதிகள், மித வாதிகள் என இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த தலைவர்களிடையே வன்முறைப் போராட்டம் என்ற அணுகுமுறையைப் புறம்தள்ளி ஆயுதங்கள் இல்லாத “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற மென்முறைப் போராட்டத்தை முன்னெடுத்து “சூரியனே அஸ்த்தமிக்காது ” என மார் தட்டி நின்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்றியது ஒரு இமாலயச் சாதனை.


ஆன்ம பலத்தை மட்டுமே ஆயுதமாகக்கொண்டு அமைதியான முறையில் அரசியல் போராட்டங்களை முன்னேடுத்துச் சென்று வெற்றி பெற முடியும் என உலகிற்கே ஒரு அரசியல் சித்தாந்தத்தை வடிவமைத்துத் தந்தவர் காந்தியடிகள். ஆகவே இந்திய விடுதலைப் போராட்டத்தை காந்தியடிகளுக்கு முன், காந்தியடிகளுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலம்.


அரசியல் தளத்தில் காந்தியடிகள் வடிவமைத்துப் பின்பற்றிய வன்முறையற்ற மென்முறைப் போராட்டம், பொருளாதாரத் தளத்தில் இனம்கண்டு நடைமுறைப் படுத்த முயன்ற சர்வோதயத் திட்டம் இரண்டிற்கும், பெருமளவில்அச்சாணியாகவும், ஆணிவேராகவும் இருந்தது இயேசுபெருமானின் போதனைகளே என்பது சரித்திரம். இயேசு பெருமானின் மலைப் பொழிவு SERMON ON THE MOUNT, ஜான் ரஸ்கின் எழுதிய UNTO THE LAST என்ற புத்தகம், லியோ டால்ஸ்டாய் எழுதிய THE KINGDOM OF GOD IS WITHIN YOU என்ற புத்தகம் என, இந்த மூன்றும் அந்தப் பெருமையைப் பெறுகின்றன.


தென்னாப்ரிக்காவிலுள்ள ஒரு சைவ உணவகத்திற்கு 1904ம் ஆண்டு சென்றபோது திரு.போலக் (Mr. Polak) என்ற நண்பர் மூலமாகப் பெற்றுக்கொண்ட ஜான் ரஸ்கின் எழுதிய Unto the last என்ற புத்தகம் காந்திஜியின் சிந்தனையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டு விட்டது. டர்பன் என்ற நகரிலிருந்து ஜோகன்னஸ்பர்க் செல்லும் ரயில் பயணத்தில் அப்புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்ட காந்திஜி இந்த உண்மையை தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார். உழைப்புக்கேற்ற ஊதியம் –தேவைக்கேற்ற ஊதியம் என்ற பொருளாதார சமன்பாட்டினை மய்யமாகக் கொண்டு இயேசு பெருமான் கூறிய ஒரு உவமை ( Mathew 20: 1 to 16 )காந்தியடிகளின் சர்வோதய திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. மேற்குறிப்பிட்ட அந்த புத்தகத்தை 1908 ம் ஆண்டு “சர்வோதயா” என்ற தலைப்பில் குஜராத் மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டது மட்டுமல்ல, தென்னாப்ரிக்காவில் அவர் நடத்திய “டால்ஸ்டாய் பண்ணையிலும் நடைமுறைப் படுத்தினார். பிற்காலத்தில் சர்வோதய நிர்மாணத் திட்டத்தை இந்தியா முழுவதும் திட்டமிட்டு செயல்படுத்த உழைத்தவர் காந்திஜி.. சமுதாயத்தில் வாழும் அனைவரின் நலனுக்காகவும் முயலும் வாழ்வியல் முறையைக் குறிப்பதுதான் “சர்வோதயா” என்ற சமஸ்கிருதச் சொல்.


“இறை அரசு என்பது இதோ உங்களிடமே உள்ளது” ( Luke 17:21 ) என்ற விவிலிய வரிகளை மையமாகக் கொண்டு, லியோ டால்ஸ்டாய் என்ற ரஷ்ய சிந்தனையாளர் 1894 ம் ஆண்டு எழதி வெளியிட்ட “ The kingdom of god is within you “புத்தகமும் “ Christianity and patriotism” என்ற கட்டுரையும்தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க சிந்தனைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தன. மக்கள் நலனுக்கு எதிரான அரசு சட்டங்களுக்கு அடி பணிய வேண்டிய அவசியமில்லை;மாறாக அச்சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்களே எடுத்து வன்முறை அல்லாது, மென்முறையாகவே அச்சட்டங்களை மீறுவதுதான் ஒத்துழையாமை இயக்கத்தின் இலக்கணம்.காந்திஜி--–லியோ டால்ஸ்டாய் என்ற இரு பெரும் சிந்தனையாளர்களின் ஏறத்தாழ இருபது ஆண்டு கால நட்பு இந்த தத்துவத்தை செதுக்கி செம்மையாக்கியது. இந்திய மண்ணிலே வெற்றி பெற்ற இத்தத்துவம் ஆங்கிலேய அரசை “கத்தியின்றி இரத்தமின்றி” வெளியேற்றியது.

காந்திஜியின் போராட்டத்தை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலே எதிர் கட்சியினர் கேட்டபோது “காந்திஜி துப்பாக்கி கொண்டு வந்தால் நாம் பீரங்கி கொண்டு தாக்கியிருக்கலாம்.ஆனால் ஆன்ம பலத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டு போராடியவர்க்கு எதிராக எந்த ஆயுதத்தை நாம் கையிலெடுக்க இயலும் என்ற பொருள்பட பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் பதில் கூறியது ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றி ;கிறித்தவ நெறியின் வெற்றி.


லண்டன் மாநகரிலே மாணவனாக சட்டம் பயின்று கொண்டிருந்தபோது 1888 ம் ஆண்டு நண்பர் ஒருவர் காந்திஜிக்கு பைபிள் ஒன்றை பரிசளித்தார். பைபிளை முழுவதுமாகப் படித்த காந்திஜி இயேசு பெருமானின் மலைப் பொழிவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்:வாழ் நாளின் பெரும்பகுதியில் அவருக்கு வழி காட்டும் ஒளி விளக்காக அந்த மலைப்பொழிவு ( Mathew 5-7 ) விளங்கியது. இந்தப் பின்னணியில், கிறிஸ்துவின் மீதும், கிறிஸ்துவத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுறிதியும் பக்தியும் கொண்ட மாசில்லாமணி பிள்ளை அவர்களுக்கு காந்தியடிகளின் அரசியல், பொருளாதார கொள்கைகளை உள்வாங்கி தனதாக்கி, காந்திஜியின் தலைமையில் இந்திய விடுதலைப் போரில் செயலாற்றுவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை:மாறாக அது இனிமையாகவும், எளிதாகவும் இருந்தது. எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் உண்மையான கிறித்தவராக வாழ்ந்த மாசில்லாமணி பிள்ளையவர்களை தன்னலமற்ற தியாகியாக, விடுதலை வீரராக உருவாக்குவதில் இந்த இறை பக்தி பெரிதும் உதவியது.


இந்திய விடுதலைப் போராட்டமே மாசில்லாமணி பிள்ளை அவர்களின் வாழ்க்கை நெறியாகி விட்டது. அதனால் அவர் எதிர்கொண்ட இழப்புக்களும், துன்பங்களும் ஏராளம். 1945 ம் ஆண்டு மத்திய அசெம்பிளிக்கு காங்கிரஸ் கட்சி சார்பிலே யாரை அனுப்பலாம் என்ற விவாதம் வந்தபோது, மைனாரிட்டி வகுப்பிலிருந்து ஒருவரை அனுப்பலாம் என்ற அடிப்படையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பெருந்தலைவர், காமராஜர், தூத்துக்குடியைச் சேர்ந்த பால் அப்பாசமியை அனுப்பலாம் என சர்தார் வல்லபாய் பட்டேலிடம் பரிந்துரைத்தார். ஆனால் பால்அப்பாசாமிக்கு வயதாகி விட்டது ஆகவே அவர் வேண்டாம் என மறுத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த தியாகி மாசிலாமணி பிள்ளையை மத்திய அசெம்பிளிக்கு அனுப்பலாம் என பட்டேல் பரிந்துரைத்தார். ஆனால் மாசிலாமணி பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை என காமராஜர் சொல்ல அதை நம்பாத சர்தார் படேல், பின்னர் மெடிக்கல் ரிப்போர்ட்டின் அடிப்படையில் தியாகி மாசிலாமணி பிள்ளையின் பெயரை நீக்கி விட்டார்... மாசிலாமணி பிள்ளையின் மனைவி திருமதி ஜெபமணி அம்மாள் இரண்டு முறை தமிழ் நாடு சட்ட சபை உறுப்பினராக இருந்தும் கூட மாசிலாமணி பிள்ளை சட்டசபை உறுப்பினராகவோ, மததிய அசெம்பிளி உறுப்பினராகவோ பணியாற்ற முடியாது போனதன் பின்னணி இதுதான். தூத்துக்குடி விக்டோரியா எக்ஸ்ட்டன்சன் ரோட்டிலுள்ள திருச்சிலுவை கன்னியர் மடத்துக் கோவில் திருப்பலிக்கு அதிகாலை தினமும் வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் மாசில்லாமணி பிள்ளை அவர்கள். அதே கோவிலுக்கு அதே திருப்பலிக்கு எனது பெரியப்பாவுடன் செல்லும் வழக்கத்தை கொண்டிருந்த எனக்கு அவர்களோடு பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்திய விடுதலைப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு அதன் காரணமாக ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்பட்டு, கடுமையான சிறை வாழ்க்கைக்கு உட்பட்டதன் காரணமாக அவர்களது உடல் நலம் எந்த அளவுக்கு பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது என்பதனை நான் கண்டிருக்கிறேன்.


1940ம் ஆண்டு காந்தியடிகள் தனி நபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தபோது, தனது மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் வீட்டிலிருப்பது சரியில்லை என உணர்ந்து, வார்தாவிலிருந்த காந்திஜிக்குக் கடிதமெழுதி, அவரது அனுமதியைப் பெற்று, மனைவிக்கு முன்னரே சத்தியாகிரகத்தில் கலந்து கைதாகி சிறை சென்ற சம்பவமும், இந்தியா அரசியல் விடுதலை அடைவதற்கு முன்பு நாடகம் போன்ற என்ற எந்த கேளிக்கைகளுக்கும் தான் செல்வதில்லை என சபதம் எடுத்திருந்தாலும் 1909 ம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தபோது அந்த சபதம் தனது மனைவியைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற தெளிவும் ,பெண்மையை அவர் எந்த அளவுக்கு போற்றினார் என்பதனையும், தனி நபர் உரிமைகளுக்கு அவர் தரும் மரியாதையும் கோடிட்டுக் காட்டுகின்றன.இன்றைய இளைய சமுதாயம் பின்பற்றவேண்டிய வாழ்க்கை நெறிகள் இவை.

தனி நபர் ஒழுக்கத்திலும் நேர்மையிலும் எவ்வித சமரசத்திற்கும் உட்படாதவர் திரு. மாசிலாமணி பிள்ளை அவர்கள். இந்திய அரசியல் விடுதலை பெற்ற பின்னர், இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது, “ எனது தாய் நாட்டுக்கான கடமையைத்தான் நான் செய்தேன்;ஆகவே அதற்கான ஓய்வூதியம் எனக்குத் தேவையில்லை என்று சொல்லி தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார் மாசில்லாமணி பிள்ளை அவர்கள்.

உண்மையான இறை பற்றாளர், உண்மையான நாட்டுப் பற்றாளராக,தேசபக்தராக இருக்க முடியும் என வாழ்ந்து காட்டிவர் திரு மாசில்லாமணி பிள்ளை அவர்கள்.

இயேசு பெருமானின் போதனைகளை முழுவதுமாக உள்வாங்கி நேர்மையான உண்மையான மனிதராக,கிறித்தவராக தனி வாழ்விலும், பொது வாழ்விலும் வாழ்ந்தவர் மாசிலாமணி பிள்ளை அவர்கள்.அவரது வாழ்க்கையிலிருந்து இன்றைய இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் --- கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

38 views0 comments
bottom of page